1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
3இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
4பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
5ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,
6ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
7அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
8உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைபண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
9ஒருவன் பொருத்தனைபண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
10அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
11அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
12ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.
13அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
14ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும்தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
15தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
16ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
17யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
18யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்ற வருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.
19வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
20அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறோருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
21யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
22ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
23அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
24யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச்சேரும்.
25உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
26தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
27சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
28ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.
29நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.
30தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
31ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
32கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
33அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
34இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.
1கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
2கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
3என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
4நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
5அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
6இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
7கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.
8கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
9கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.
11பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
12நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?
13உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
14தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
15கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
16தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.
17நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
18நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
20அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
21தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
22கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
1செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
2ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.
3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
4அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
5நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே.
6மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
7வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.
8படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
9கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.
10இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்.
11தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.
12ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.
13அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்.
14மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
15ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
16ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
17ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.
18மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.
19விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
20ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.
1நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.
2முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.
3முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
4தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
5தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
6அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,
7நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
8எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
9வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,
10தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
11ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
12நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
13நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
14அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
15இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com