‹ முகப்புமுழுத் திட்டம்

ஏப்ரல் 25 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஏப்ரல் 25அடுத்த நாள் ›
குடும்பம்

எண்ணாகமம் 2

முழு அதிகாரம் ›

1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

2இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.

3யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

4எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்துநாலாயிரத்து அறுநூறுபேர்.

5அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதநெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

6எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.

7அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

8அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.

9எண்ணப்பட்ட யூதாவின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.

10ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

11அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.

12அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

13அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.

14அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

15அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.

16எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிராயணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.

17பின்பு ஆசரிப்புக்கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.

18எப்பிராயீமுடைய பாளயத்துக்கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

19அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.

20அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

21அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.

22அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

23அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.

24எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.

25தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

26அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.

27அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

28அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.

29அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

30அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.

31எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள்.

32இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.

33லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.

34கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப் போனார்கள்.

1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.

2அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.

3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

4அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.

5கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.

6உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

9ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

10உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.

11பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.

12அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.

தனிவாசிப்பு

1நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.,

2சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும்,

3மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,

4ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,

5மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம், பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீவனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,

6வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால்உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,

7இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

8மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

9மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.

10இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.

11ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.

12என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.

13காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

14ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

1கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,

2பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:

3நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

4கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,

5என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,

6உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.

7சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.

8ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,

9நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.

10என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.

11முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.

12அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.

13சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.

14ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.

15அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.

16எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!

17ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.

18அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.

19பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.

20ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.

21நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.

22மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.

23கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,

24என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com