‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 13 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 13அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 3

முழு அதிகாரம் ›

1சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

2ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.

3தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான்.

4அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

5ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான்.

6மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.

7சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.

8கர்த்தர் மறுபடியும் மூன்றாம் விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,

9சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.

10அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

11கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

12நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.

13அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.

14அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.

15சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.

16ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.

17அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான்.

18அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்: அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

19சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.

20சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.

21கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.

1இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?

2அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

3சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?

4அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

5நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?

6அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?

7அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

8நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

9ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல, யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.

10அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

12எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

14அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;

15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;

16நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;

17சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;

18அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.

19மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

20இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

21இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.

22அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

23எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

25தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,

26கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.

27இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.

28ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

29தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.

30விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

31அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

தனிவாசிப்பு

1பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம்பண்ணினார்கள்.

2அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.

3மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.

4அவன் கெதலியாவைக் கொன்றபின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:

5தாடியைச் சிரைத்து, வஸ்திரங்களைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் தூபவர்க்கங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள்.

6அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.

7அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.

8ஆனாலும் அவர்களில் பத்துப்பேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து: எங்களைக் கொலைசெய்யவேண்டாம்; கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூடக் கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.

9இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

10பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டு போனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப்போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.

11நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது,

12அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம்பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.

13அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும் கண்டு சந்தோஷப்பட்டு,

14இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.

15நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.

16கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப்போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப்பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு,

17பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம் கல்தேயருக்குப் பயந்தபடியினால்,

18தாங்கள் எகிப்துக்குப் போகப்புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்காமின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.

1கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

2உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவனவாக.

3நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணியிருக்கிறேன்.

4மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.

5என் நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என் காலடிகள் வழுவிப்போகவிலலை.

6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதிலருளுவீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.

7உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.

8கண்மணியைப்போல என்னைக் காத்து.

9என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணின் பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

10அவர்கள் கொழுத்துப்போய், தங்கள் வாயினால் இருமாப்பாய் பேசுகிறார்கள்.

11நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கின்றன.

12பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

13கர்த்தாவே, உம்முடைய பட்டயத்தினால் என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.

14கர்த்தாவே, மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.

15நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com