‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 19 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 19அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 11

முழு அதிகாரம் ›

1அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

2அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.

3அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழு நாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை இரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.

4அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காது கேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.

5இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

6சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,

7ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

8அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.

9வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு இரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

10பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.

11மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள்.

12அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.

13அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.

14அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.

15அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

1எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;

2நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.

3மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.

4அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

5பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

6தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.

7அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.

8அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.

9அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.

10இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,

11பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,

12மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.

13அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

14ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.

15அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

16ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

17மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

18ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

19இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.

20அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

21மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?

22தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,

23தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

24அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.

25அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.

26நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.

27அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;

28அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.

29அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

30இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.

31நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.

32என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

33இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

தனிவாசிப்பு

1மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.

2எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத் தொடரும்.

3பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.

4மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.

5லூகித்துக்கு ஏறிப்போகிற வழியில் அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிறதினால் உண்டாகிய கூக்குரலைச் சத்துருக்கள் கேட்கிறார்கள்.

6உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்.

7நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போகும்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.

8பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளதாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.

9மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.

10கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

11மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.

12ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.

13அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும்.

14நாங்கள் பராக்கிரசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?

15மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைகளத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

16மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.

17அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

18தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்.

19ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.

20மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.

21சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,

22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,

23கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும்,

24கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும்.

25மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திப்பண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.

27இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே.

28மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்.

29அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.

30அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.

31ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சுவிடப்படும்.

32சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்தகாலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

33பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.

34எஸ்போன்துவக்கி எலெயாலேமட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஒரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.

35மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

36ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்துபோகிறபடியினால் அப்படித் தொனிக்கும்.

37தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.

38மோவாபின் சகல வீடுகளின்மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

39மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்.

40இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.

41கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.

42மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.

43மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

44திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

45வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினி ஜூவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப்தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.

46மோவாபே, உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.

47ஆனாலும் கடைசி நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.

1கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

2என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.

3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.

4கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

6கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவை அநாதி காலமுதல் இருக்கின்றனவே.

7என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

8கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

9சிறுமைபட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

10கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.

11கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.

12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

13அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.

14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

15என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாய் இருக்கிறேன்.

17என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என் இடுக்கண்களிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.

18என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

19என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.

20என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

22தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com