‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 7 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 7அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 21

முழு அதிகாரம் ›

1இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.

2ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே தேவசந்நிதியிலே சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது:

3இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்து போகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.

4மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

5கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

6இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.

7மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்ன செய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கொண்டோமே.

8இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

9ஜனங்கள் இலக்கம் பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.

10உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.

11சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.

12இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

13அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.

14அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.

15இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.

16பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு,

17இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,

18நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.

19பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,

20அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,

21சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம் பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.

22அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.

23பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

24இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.

25அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான்.

அப்போஸ்தலர் 25

முழு அதிகாரம் ›

1பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.

2அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,

3அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.

4அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கேபோகிறேன்.

5ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.

6அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

7அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங்கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள்.

8அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.

9அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.

10அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.

11நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.

12அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான்.

13சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.

14அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.

15நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

16அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.

17ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.

18அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,

19தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.

20இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.

21அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.

22அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

23மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாதிபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான்.

24அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள்.

25இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.

26இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,

27இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.

தனிவாசிப்பு

1யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

2நீ ரேகாபியருடைய வீட்டுக்குப்போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக்கொடு என்றார்.

3அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;

4கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,

5திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திரரின் முன்னே வைத்து, அவர்களை நோக்கி: திராட்சரசம் குடியுங்கள் என்றேன்.

6அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,

7நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.

8அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,

9நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.

10நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம்.

11ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.

12அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

13இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.

15நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களைப் பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாதவழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.

16இப்போதும், ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற் போனபடியினாலும்,

17இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

18பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

19ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

சங்கீதம் 7-8

முழு அதிகாரம் ›
சங்கீதம் 7

1என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

2சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.

3என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,

4என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,

5பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைப் புழுதியிலே தாழ்த்தக்கடவன். (சேலா)

6கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.

7ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.

8கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

9துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

10செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.

11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

13அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.

14இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

16அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

17நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

சங்கீதம் 8

1எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

2பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

3உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

4மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

6உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.

7ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,

8ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

9எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com