‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 1 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 1அடுத்த நாள் ›
குடும்பம்

I நாளாகமம் 29

முழு அதிகாரம் ›

1பின்பு தாவீது ராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.

2நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதகம் முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.

3இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

4அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.

5இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான்.

6அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம் பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,

7தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

8யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

9இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

10ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

11கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர், எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.

12ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

13இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

14இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

15உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

16எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

17என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.

18ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.

19என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

20அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,

21கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

22அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம் விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.

23அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.

24சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.

25இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

26இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.

27அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; எப்ரோனிலே ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.

28அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.

29தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,

30ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

1பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.

2பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.

3முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,

4அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

5பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,

6அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

7இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

8பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

9தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

10கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.

11இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!

12தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.

13அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

14ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

15மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

16எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

17ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

18நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

தனிவாசிப்பு

1கர்த்தர் சொல்லுகிறதைச் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது.

2பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.

3என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல்.

4நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.

5என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.

6என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒருவயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?

7ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?

8மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

9கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.

10துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?

11கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?

12அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.

13ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்.

14நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம்பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.

15நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.

16நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.

1சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

2அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

3அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

4உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

5கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,

6வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

7அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

8அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?

9கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?

10அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

11பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.

12அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

13சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

14எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,

15அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

16அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

17அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

18நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

19இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

20எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

21குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

22அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.

23கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

24என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.

25அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;

26ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.

27அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.

28அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

29அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

30வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

31அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

32உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com