1ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான்.
2தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது:
3நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:
4நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.
5ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
6அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
7பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,
8காத்தும், மரேஷாவும், சீப்பும்,
9அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
10சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,
11அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,
12யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
13இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.
14லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதா தேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.
15அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.
16அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.
17இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள்.
18ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.
19இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.
20அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.
21ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.
22ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
23அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.
1ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
2அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்;
3அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.
4அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம் மட்டும் வந்தான்.
5அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
6அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.
7அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
8ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
9அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
10அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
11ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
12அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனை விட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது.
13அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அரசாண்டான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.
14அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
15ரெகொபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
16ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
2உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
3நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
4ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
5ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
6நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
7ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
8சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
9உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
10நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
11ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
12பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
13உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
14ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
15அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
16நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
17ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
18தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
19உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
20ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
21அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
22இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
23அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
24தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
25உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
26ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
28விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
29ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
1இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!
2அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.
3அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்.
5அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.
6ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின.
7உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.
8ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.
9அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
10எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் குமாரத்தியானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள்.
11எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
12உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.
13இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள்.
14சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
15கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.
16அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
17உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
18உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன்.
19இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன்.
20அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
7அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
8அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
11அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
13அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
14அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
15யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
16அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
17எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
19எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
20அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
22அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
28இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
31நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்.
32பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
33நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
35மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
36இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
39அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
41அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
42பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
43மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
44பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
47இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
48அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
49அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
51பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com