‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 13 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 13அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 14-15

முழு அதிகாரம் ›
II நாளாகமம் 14

1அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.

2ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

3அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

4தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,

5யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

6கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

7அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.

8யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள்.

9அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.

10அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.

11ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

12அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.

13அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,

14கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.

15மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

II நாளாகமம் 15

1அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,

2அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

3இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

4தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

5அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

6ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.

7நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.

8ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,

9அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.

10ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,

11தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,

12தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;

13சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்னும் ஒரு உடன்படிக்கை செய்து,

14மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.

15இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.

16தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

17மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.

18தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

19ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 4

முழு அதிகாரம் ›

1இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

2உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

3வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.

4அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

5அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

6அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

7முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

8அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

9மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

10இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

11கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

தனிவாசிப்பு

1ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய், கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:

2நீ செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், ஜனத்தில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்:

3இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா?

4ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன் கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

5நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.

6சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.

7சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

8வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

9முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

10தரியுவின் இரண்டாம் வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:

11ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

12அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.

13பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.

14அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.

15இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

16அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.

17கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

19களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.

20இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:

21நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,

22ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

23சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

1யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.

2அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.

3இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

4அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.

5இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

6மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

7நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம்;

8காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

9அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.

10இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?

11மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை.

12பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

13பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

14சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்,

15தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

17உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

18அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

19ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

20பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

21சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

22இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.

23சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

24அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.

25அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.

26அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.

27யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.

28நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.

29மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

30அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.

31உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.

32தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

33அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.

34தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

35பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

36குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com