‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 19 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 19அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 22-23

முழு அதிகாரம் ›
II நாளாகமம் 22

1எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கின தண்டிலிருந்தவர்கள் மூத்த குமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான்.

2அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் அத்தாலியாள்.

3அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.

4அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.

5அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடேகூட, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.

6அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.

7அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான்.

8யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்று போட்டான்.

9பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம் பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போயிற்று.

10அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.

11ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்று போடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக்கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.

12இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

II நாளாகமம் 23

1ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

2அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.

3அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக்குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.

4நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும்,

5மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.

6ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.

7லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.

8ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதா கோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறை தீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவு கொடுக்கவில்லை.

9தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,

10அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலது பக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.

11பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.

12ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,

13இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

14ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

15அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.

16அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.

17அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.

18தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக. யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்து வைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,

19யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.

20நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்து வந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.

21தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் 10

முழு அதிகாரம் ›

1பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

2திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

3சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

4அவ்வேழு இடிகளும், தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

5சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:

6இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

7வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

8நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

9நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும். ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.

10நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

11அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

தனிவாசிப்பு

1நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன.

2முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,

3மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன.

4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

5அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.

6ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின.

7சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.

8பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.

9பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:

10சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,

11அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,

12அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.

13அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.

14இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

15தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.

1அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.

2அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

3இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

4பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

5நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

6இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:

7நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.

8அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.

9சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.

10அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.

11அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.

12அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.

13குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.

14இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

15ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.

16அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.

17மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.

18அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து,

19அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.

20தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக; இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.

21இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.

22அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள்.

23அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.

24ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.

25அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.

26அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.

27அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.

28அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.

29மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள்.

30அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.

31பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

32பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே.

33அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.

34அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.

35அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.

36அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.

37இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே, பேசுகிறவர் அவர்தான் என்றார்.

38உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

39அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.

40அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.

41இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com