‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 25 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 25அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 30

முழு அதிகாரம் ›

1அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.

2பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.

3ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக்கூடாமற்போயிற்று.

4இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.

5எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் பறைசாற்றுவிக்கத் தீர்மானம் பண்ணினார்கள்.

6அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.

7தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.

8இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களை விட்டுத் திரும்பும்.

9நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.

10அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன்மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

11ஆகிலும், ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.

12யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும், கட்டளையிட்ட பிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

13அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.

14அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலே போட்டார்கள்.

15பின்பு இந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக் குட்டிகளை அடித்தார்கள்' ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,

16தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித்தெளித்தார்கள்.

17சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.

18அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராத பிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

19எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.

20கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக்கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ் செய்தார்.

21அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

22கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழு நாள் அளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

23பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.

24யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியரில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.

25யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களுடைய சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.

26அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.

27லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

வெளிப்படுத்தின விசேஷம் 16

முழு அதிகாரம் ›

1அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழுதூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.

2முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.

3இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.

4மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.

5அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

6அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

7பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.

8நான்காம் தூதன் தன் கலசத்திலிலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.

9அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.

10ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,

11தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.

12ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந்திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

13அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.

14அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

15இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

16அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.

17ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.

18சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

19அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.

20தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.

21தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.

தனிவாசிப்பு

சகரியா 12:1-13:1

முழு அதிகாரம் ›
சகரியா 12

1இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:

2இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப்போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும்.

3அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.

4அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

5எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.

6அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

7தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

8அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

9அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

10நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

11அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.

12தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

13லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

14மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்.

சகரியா 13

1அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

1நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.

2என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

3நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

4என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

5நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

6ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.

7நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

8நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

9பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

10நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

11என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

12நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

13ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

14நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

15இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

16நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

17நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.

18உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.

19நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

20ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.

21அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.

22நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

23என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

24வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

25முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

26பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.

27நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com