‹ முகப்புமுழுத் திட்டம்

டிசம்பர் 3 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்டிசம்பர் 3அடுத்த நாள் ›
குடும்பம்

II நாளாகமம் 2

முழு அதிகாரம் ›

1சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,

2சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம் பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

3தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும்.

4இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வு நாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்திய காலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்கதகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைப்பண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.

5எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.

6வானங்களும், வானாதிவானங்களும், அவரைக் கொள்ளக்கூடாதிருக்க அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே ஒழிய, வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம் கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

7இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பரநூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.

8லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.

9நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.

10அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

11அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.

12கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியுமுடைய ஞானமுள்ள குமாரனை, தாவீது ராஜாவுக்குக் கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

13இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.

14அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீருதேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும, இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பர நூலிலும், இளநீலநூலிலும் மெல்லிய நூலிலும், சிவப்பு நூலிலும் வேலை செய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.

15என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.

16நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல் வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.

17தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்துஐம்பத்து மூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.

18இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.

1என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

2நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

3அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

5அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

6அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

7சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

8மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

9ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.

10தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.

11தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

12பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

13பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

14பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

15உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

16ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

17உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

18பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

19அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்.

20நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

21சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

22இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

23குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.

24ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.

25நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

26உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

27நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

28இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.

29அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

தனிவாசிப்பு

1நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.

2கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர் அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.

3கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது.

4அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.

5அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.

6அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.

7கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

8ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.

9நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.

10அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.

11கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.

12கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.

13இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்.

14உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்து விதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும், நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.

15இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.

1பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

2அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.

3உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.

4அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.

5அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

6அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

7உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

8நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?

9தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.

10அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

11பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.

12அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:

13இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.

14அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.

15அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

16அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

17அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?

18தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

19அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

20தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

21இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

22பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.

23இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

24மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.

25அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.

26நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

27நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

28லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.

29லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

30மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

31அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.

32லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.

33தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.

34அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.

35திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

36வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

37அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com