1இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.
2பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு,
3அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.
4தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
5எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.
6காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
7அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.
8அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
9அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன்.
10அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
11பார்வோனுடைய பாத்திரம் என்கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.
12அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம்.
13மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;
14இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.
15நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
16அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்;
17மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.
18அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.
19இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.
20மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,
21பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
22சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
23ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.
1அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
2அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
3அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
4அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுக்கொடுத்திருக்கிறார் என்றார்கள்.
5இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
6ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
7இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
8அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
9ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
10பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
11அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
12மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.
13அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
15எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
17பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
18அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
19விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
20அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
21இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
22அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
23அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
24சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!
25ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
26அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
27இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
28அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
29அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
30இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
31ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.
32பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:
33இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
34அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
35அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
36அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
38இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்.
39அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
40ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
41மற்ற பத்துப்பேரும் அதைக் கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
42அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
43உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
44உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
45அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
46பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
47அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
48அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
49இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
50உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
51இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
52இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.
1யோபு பிரதியுத்தரமாக:
2என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
3அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
4சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
5புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
7உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது.
8ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,
9தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.
10அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.
11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது?
12என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?
13எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே.
14உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதே போகிறான்.
15என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்து போகிறார்கள்.
16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
17உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்து போகின்றன.
18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
19தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள்.
21அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
22எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;
23அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிக்காரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
24எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
25செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
28இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
29நீங்கள் திரும்புங்கள்; அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.
30என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
1சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
2தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
3எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
4விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
5மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
6விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?
7அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி;
8இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
9என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
11அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
12யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
13ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
14அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
15அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
16ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
17ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
18இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
19இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.
20அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.
21இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com