‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூலை 21 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூலை 21அடுத்த நாள் ›
குடும்பம்

நியாயாதிபதிகள் 4

முழு அதிகாரம் ›

1ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.

2ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.

3அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

4அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

5அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.

6அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,

7நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புகொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.

8அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

9அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.

10அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம்பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.

11கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

12அபினோகாமின் குமாரன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,

13சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

14அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

15கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனான்.

16பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

17சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

18யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

19அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால்துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

20அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

21பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெறியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

22பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீ தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

23இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.

24இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன்மேல் பலத்துக்கொண்டேயிருந்தது.

அப்போஸ்தலர் 8

முழு அதிகாரம் ›

1அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்.

2தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்.

3சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.

4சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

5அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்.

6பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.

7அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.

8அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.

9சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.

10தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.

11அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

12தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

13அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.

14சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

15இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

16அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

17அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.

18அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

19நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

20பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.

21உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.

22ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.

23நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.

24அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

25இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.

26பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.

27அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;

28ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.

29ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.

30அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

31அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.

32அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

33அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.

34மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

35அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.

36இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

37அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

38இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.

39அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.

தனிவாசிப்பு

1யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.

2உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.

3வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.

4அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.

5மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

7கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

8அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

9எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

10கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

11அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

12எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது.

13இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிறயாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

14கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

15இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.

16நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.

17நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.

18நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.

19கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,

20அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

21நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்.

22ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

23அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய்க் கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

24நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் என் சொல்லைக் கேட்பீர்களானால்,

25அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

26யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான சீமையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், போஜனபலிகளையும், தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்.

27நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக் கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்து போகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.

2அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

3அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;

4அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.

5அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

6உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.

7இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார்.

8கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.

9அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.

10ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.

11அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.

12தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

13பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

14அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,

15வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.

16அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.

17செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,

18அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,

19அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

20பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.

21அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

22எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

23அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?

24ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.

25ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.

26சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.

27பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

28மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

29ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.

30அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.

31அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

32அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.

33அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி;

34தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

35தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com