1நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,
2நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
3இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.
4இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
5நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புக்கூருவாயாக.
6இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
7நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
8அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபக்குறியாய் இருக்கக்கடவது.
9அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
10உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
11நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,
12நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
13உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.
14உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
15உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.
16நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.
17உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக.
18நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,
19கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.
20நாளைக்கு உன் புத்திரன்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
21நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
22கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,
23தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
24இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.
25நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமூகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
1கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
2கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
3என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி:
4என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
5கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
6ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
7தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
10நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
13உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
15கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
16அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
17நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
18கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
20என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன்.
21என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
22சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
24என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
25அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலது கரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
26அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
27நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
28என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
29அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.
30அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;
31என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என் நியமங்களை மீறி நடந்தால்;
32அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
33ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
34என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.
35ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.
36அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
37சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா)
38ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
39உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
40அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
41வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
42அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
43அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
44அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
45அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)
46எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
47என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன?
48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
49ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
50ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
51கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
52கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென். ஆமென்.
1ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
2சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
3அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும்.
4வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
5வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.
6போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.
7அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போகும்.
8அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்.
9அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.
10இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
11நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.
12ராஜ்யபாரம்பண்ண அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.
13அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும்.
14அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.
15அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும்.
16கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
17அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.
1இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
2உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
3வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.
4அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.
5அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
6அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
7முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
8அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
9மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
10இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
11கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com