1ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.
2மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்து தேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,
3கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.
4ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.
5கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
6நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.
7நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டார்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,
8அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.
9இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
10உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்,
11நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு,
12உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,
13உங்கள் பிள்ளைகளும், உங்கள் மனைவிகளும், உங்கள் பாளயத்துக்குள்ளிருக்கிற உங்கள் விறகுக்காரனும், உங்கள் தண்ணீர்க்காரனுமான அந்நியர் எல்லாரும் இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறீர்களே.
14நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்,
15இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும் கூட அதைப் பண்ணுகிறேன்.
16நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
17அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.
18ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
19அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்.
20அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
21இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார்.
22அப்பொழுது உங்களுக்குப்பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,
23கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும், கோமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடிக்கு, கந்தகத்தாலும், உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
24அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
25அதற்கு: அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,
26தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே,
27கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண, அதின்மேல் கோபம் மூண்டவராகி,
28அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.
29மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
49நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
50அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
51அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
52கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
53உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
54நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
55கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
56நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.
57கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
59என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
61துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
63உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
64கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
65கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
66உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.
67நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
68தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
69அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
70அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
71நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
72அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
1கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
2இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
3கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.
4என் ஓய்வு நாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
5நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
6கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும்,
7நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
8இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்.
9வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.
10அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
11திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.
12வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:
6நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
7அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;
10அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
12யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,
13நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
15இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
16ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
19என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார்.
22உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
23பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
24அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com