1நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
2தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது.
3அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான்.
4அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.
5வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்றாள்.
6அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.
7அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள்மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது.
8அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய்,
9கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்.
10நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
11கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.
12இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு,
13நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.
14அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள்.
15அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள்.
16அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவருமட்டும் அங்கே மூன்றுநாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்றாள்.
17அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்.
18இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம்.
19எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடே வீட்டில் இருக்கிற எவன்மேலாகிலும் கைபோடப்பட்டதேயாகில், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும்.
20நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.
21அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
22அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும், மூன்றுநாள் அங்கே தரித்திருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழியிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள்.
23அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து;
24கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்கு முன்பாகச் சோர்ந்து போனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.
1பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
2இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
3எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
4சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.
1மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
2கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
3அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
1கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
2பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
4கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
1சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.
2ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.
3நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
4நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
5வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
6எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
7அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.
8இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
9அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.
10வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.
11நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம்வரைக்கும் கூறுகிறார்.
12அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.
1அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
2அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
3பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
4கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
7போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
8வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
9உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
10வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது,. பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
11எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
12ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
13அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
14எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
15நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
16ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள்.
17மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
18அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
19அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
21சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
22என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
23ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.
25சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
27நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
29ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
30உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
31ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
32மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.
33மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
34பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
35எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
37தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
39தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
40உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
41தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
42சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com