‹ முகப்புமுழுத் திட்டம்

ஜூன் 5 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஜூன் 5அடுத்த நாள் ›
குடும்பம்

1இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,

2ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.

3உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

4உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

5உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

6ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

7நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள் முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

8ஒரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.

9கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

10அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.

11இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,

12கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.

13பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

14ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின் கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

15அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.

16நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.

17அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

18கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும் பகலும் நாற்பது நாள் விழுந்து கிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

19கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.

20ஆரோன் மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.

21உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப் போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.

22தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.

23நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

24நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.

25கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பது நாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

26கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.

27கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக் கூடாமற்போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு,

28தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.

29நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.

சங்கீதம் 92-93

முழு அதிகாரம் ›
சங்கீதம் 92

1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,

2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன்.

5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.

7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.

9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.

10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.

11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

13கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

சங்கீதம் 93

1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

2உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.

3கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.

தனிவாசிப்பு

1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.

4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

5இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

6அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

7இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

8அசீரியா ராஜா லாகீசை விட்டுப்புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

9அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

10நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.

11இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?

12என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

13ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

14எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

15கர்த்தரை நோக்கி:

16சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

17கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

18கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

19அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

20இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்.

21அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.

22அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

23யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

24உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

25நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய்.

26நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

27அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.

28உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

29நீ எனக்கு விரோதமாய்த் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.

30உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

31யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.

32மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

33ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.

34அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.

35என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

36அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

37அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

38அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 7

முழு அதிகாரம் ›

1இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.

2ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வெறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:

3நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.

4முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.

5யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

6ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

7சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

8செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

9இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

10அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

11தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

12ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.

13அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

14அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

15ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

16இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, இனித் தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.

17சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com