1ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.
2திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தபழி சுமராது.
3சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.
4அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.
5ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
6அக்கினி எழும்பி, முள்ளுக்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.
7ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.
8திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
9காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.
10ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
11அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.
12அது அவன் வசத்திலிருந்து திருடப்பட்டுப்போயிற்றானால், அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம்பண்ணக்கடவன்.
13அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை.
14ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.
15அதற்கு உடையவன் கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம்.
16நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
17அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
18சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
22விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
23அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
24கோபம்மூண்டவராகி, உங்களைப்பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
25உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
26பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
27அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.
28நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
29முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.
30உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
31நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.
1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
7அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
8அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
11அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
13அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
14அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
15யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
16அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
17எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
19எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
20அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
22அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
28இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
31நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்.
32பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
33நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
35மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
36இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
39அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
41அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
42பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
43மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
44பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
47இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
48அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
49அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
51பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
1பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:
2சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.
3அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
7இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
9தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
10இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
11நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,
12பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
13நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
14அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.
15இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும்.
16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
17அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
19அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
20காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
22தழைகளின் நிழல் அதைக்கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
23இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?
1உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
3நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
4எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
6உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.
7வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன்.
8மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
9நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
10அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.
11அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
12ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
13நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
14உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே.
15எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்.
16ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
17மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
18தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com