1பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.
2மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.
3மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
4மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.
5இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
6அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,
7உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
8அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.
9பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரின் எழுபதுபேரும் ஏறிப்போய்,
10இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.
11அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.
12அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
13அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,
14அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.
15மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
16கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
17மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
18மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
1யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
2அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
3இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
4அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.
5இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
6மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
7நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம்;
8காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
10இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?
11மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை.
12பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
13பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
14சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்,
15தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
17உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
22இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.
23சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
24அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
25அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.
26அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
27யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.
28நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
29மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
30அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
31உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
32தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
34தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
35பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
36குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
1அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
4நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.
5என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
6ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
7கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
8ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.
9அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும்போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
10யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
11அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.
12கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
13ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
14மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
15தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
17யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
1மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
3அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
4அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
5இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்.
7அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
8அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
10அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
12அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும்., அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
13எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.
14இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
16அப்படியாகட்டும், நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன் மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?
18தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத்தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?
19நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
20ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;
21மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ வென்றும் பயந்திருக்கிறேன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com