‹ முகப்புமுழுத் திட்டம்

மார்ச் 15 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மார்ச் 15அடுத்த நாள் ›
குடும்பம்

யாத்திராகமம் 26

முழு அதிகாரம் ›

1மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.

2ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.

3ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

4இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.

5காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.

6ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.

7வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.

8ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும், நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.

9ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக.

10இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,

11ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக.

12கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதிமூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.

13கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.

14சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.

15வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.

16ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.

17ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.

18வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.

19அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

20வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,

21அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.

22வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,

23வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.

24அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.

25அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.

26சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

27வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.

28நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.

29பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய்.

30இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.

31இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.

32சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

33கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

34மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;

35திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.

36இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

37அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.

1இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.

2எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.

3அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.

4ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.

5முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.

6படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.

7அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.

8இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

9உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

10ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டுபோகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.

11அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.

12அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

13சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.

14அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

15அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.

16இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.

17இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்.

18அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

19அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

20பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.

21பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.

22அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

23குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.

24என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

25மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

26ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.

27அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

28இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்;

29அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

30நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

31என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.

32என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.

33நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.

34நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.

35அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.

36யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.

37என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.

38அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.

39வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

40அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.

41நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

42உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.

43நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்.

44தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

45பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.

46நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.

47அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.

தனிவாசிப்பு

நீதிமொழிகள் 2

முழு அதிகாரம் ›

1என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

2நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

3ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

4அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

5அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

6கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

8அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

10ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

12அதினால் நீ துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,

13அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,

14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

15மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

17இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.

18அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.

19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.

21செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

22துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.

கலாத்தியர் 1

முழு அதிகாரம் ›

1மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,

2என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:

3பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;

4அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;

5அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

6உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;

7வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

8நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

9முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

10இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.

11மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

12நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

13நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;

14என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

15அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,

16தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;

17எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.

18மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.

19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.

20நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

21பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.

22மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.

23முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,

24என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com