‹ முகப்புமுழுத் திட்டம்

மார்ச் 27 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்மார்ச் 27அடுத்த நாள் ›
குடும்பம்

யாத்திராகமம் 38

முழு அதிகாரம் ›

1தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழநீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

2அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி,

3அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

4வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,

5அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,

6அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி,

7பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.

8ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.

9பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.

10அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

11வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.

12மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.

14ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

15பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

16சுற்றுபிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.

17தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.

18பிராகார வாசலின் தொங்குதிரை இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.

19அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

20வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.

21மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.

22யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

23அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.

24பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது.

25சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.

26எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.

27அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.

28அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.

29காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.

30அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப்பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,

31சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகலமுளைகளையும் பண்ணினான்.

1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

2பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

3ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

4பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

6நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

7நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.

8நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

9நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.

10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.

11நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

12நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.

14நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

15நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

16நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

17உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

18நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.

19அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

20நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.

21அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

22நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

24பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.

25நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

26நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

தனிவாசிப்பு

நீதிமொழிகள் 14

முழு அதிகாரம் ›

1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

2நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.

3மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

4எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய்வரும்.

7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.

8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.

10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

12மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.

13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

17முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

18பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

19தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

20தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.

21பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.

25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

27கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

28ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.

29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்;

32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

34நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

35ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

பிலிப்பியர் 1

முழு அதிகாரம் ›

1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

2நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

3சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,

4நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,

5உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,

6நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

7என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.

8இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.

9மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,

10தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,

11நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.

12சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.

13அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,

14சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.

15சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.

16சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.

17சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.

18இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.

19அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.

20நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.

21கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.

22ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.

23ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;

24அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

25இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,

26உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.

27நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.

28நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.

29ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

30நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com