1இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல நிமித்தம் பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி,
2தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.
3அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
5யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
6அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
7அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.
8தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
9சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
10அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
11ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.
12அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,
13நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?
14இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,
15அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
17அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
18ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
19யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
20மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
21அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
22ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாள் செல்லும் என்றான்.
23பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
24சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
25பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.
1பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
2அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
3தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்தருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
4பூமியின்மீதெங்கும் உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
5தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங்கிரியையில் பயங்கரமானவர்.
6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
7அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா)
8ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
9அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
10தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
11எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
12மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
13சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
14என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
15ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
17அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
18என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
19மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
20என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
2தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா)
3தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா)
5தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
1கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி, யாக்கோபின் வம்சத்தோடே கூடிக்கொள்வார்கள்.
2ஜனங்கள் அவர்களை அழைத்துக் கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.
3கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே,
4நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!
5கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
6உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
7பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.
8தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.
9கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.
10அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.
11உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
12அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
13நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
15ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
16உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,
17உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
18ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
19நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.
20நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.
21அவன் புத்திரர் எழும்பித்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் பண்ணுங்கள்.
22நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பெளத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
23அதை முள்ளம்பன்றிகளுக்குச் சுதந்தரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
24நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.
25அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.
26தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
27சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?
28ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
29முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.
30தரித்திரரின் தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசித்து, எளியவர்கள் சுகமாய்ப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகப்பண்ணுவேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான்.
31வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்து போகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.
32இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.
1இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
2சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
3நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
4மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
5ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
6அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
7ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
8அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
9நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
10முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
11பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,
12புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
13நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.
14மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.
15நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
16சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
17எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
18வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
19ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.
20நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
21இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
22அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
23அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
24நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
25சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com