1யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
2ஆசரிப்புக் கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:
3எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.
4எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.
5மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு போனான்.
6அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
7செலோபியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.
8மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.
9அவனுக்குக் குமாரத்தியும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.
10அவனுக்குச் சகோதரரும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.
11அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
12பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
13நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;
14சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.
15அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:
16கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,
17அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.
18கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,
19அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
20இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.
21அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
22மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
23அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
1தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத்தீவிரியும்.
2என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.
3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
4உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
5நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
1கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
4என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
5கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.
6நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
7அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.
8என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
10என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.
12தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
13என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.
14நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
15என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
16கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
17தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக.
19தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
21என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
22என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
23நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
1தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
2ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தைகளின் வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.
3அரண் எப்பிராயீமையும், ராஜாங்கம் தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் புத்திரருடைய மகிமைக்கு நேரிட்டதுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் நேரிடும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
4அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோகும், அவனுடைய கொழுத்த தேகம் மெலிந்துபோகும்.
5ஒருவன் ஓங்கின பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.
6ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டு மூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
7அக்காலத்திலே மனுஷன் தன் கைகளின் கிரியையாகிய பீடங்களை நோக்காமலும், தன் விரல்கள் உண்டுபண்ணின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் நோக்காமலும்,
8தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக் கொண்டிருக்கும்.
9அக்காலத்திலே அவர்களுடைய அரணான பட்டணங்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு மீதியாய் வைக்கப்பட்ட தழையைப்போலவும், நுனிக்கொம்பைப்போலவுமாகி, பாழாய்க்கிடக்கும்.
10உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,
11பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.
12ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.
13ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
14இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.
1எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும்,
2கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.
3பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.
4நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
5திராட்சச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிற காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளையரிந்து அகற்றிப்போடுவார்.
6அவைகள் ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பட்சிகள் அதின்மேல் கோடைகாலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மாரிகாலத்திலும் தங்கும்.
7அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது, சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
1உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:
2உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
3சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
4அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
5அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
6ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
7அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
8தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
9விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
10கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
11அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
12உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
13உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
14ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com