1அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,
2ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும் எருசலேமின் குடிகள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர் துவக்கிப் பெரியோர் மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.
3அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.
4பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.
5யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.
6தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான்.
7கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.
8அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்.
9மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தாரம்பெற்றார்கள்.
10ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,
11கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுமட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
12யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.
13எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,
14சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.
15இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான்.
16யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.
17அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள்.
18அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவன் எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.
19கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,
20அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான்.
21பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.
22இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.
23ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப்பட்டது.
24ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா அஞ்சனக்காரரையும், குறிசொல்லுகிறவர்களையும், சுரூபங்களையும் நரகலான விக்கிரகங்களையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.
25கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.
26ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்:
27நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.
28யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
29அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான்.
30மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.
31யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அமுத்தாள்.
32அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
33அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,
34யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.
35அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்.
36யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் செபுதாள்.
37அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
1அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.
2தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.
3அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது.
4மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
5அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.
6அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
7அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
8அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
9தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
10மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
11இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
12காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
13பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
14பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
1சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
2அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.
3அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜூவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
4அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும்.
5அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினி ஜூவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைசல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
6அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
7அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
8ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.
9அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.
10அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.
11கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?
12ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
14ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
15சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.
16ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
17கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
18அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.
19கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல் உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
20வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
21தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
22வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.
23சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.
24களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
25நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
26நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
27நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
28அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
30வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
31கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
32அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும், கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.
1கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
2அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
3என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
4வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
5கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
6என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
7உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com