‹ முகப்புமுழுத் திட்டம்

நவம்பர் 12 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்நவம்பர் 12அடுத்த நாள் ›
குடும்பம்

II இராஜாக்கள் 25

முழு அதிகாரம் ›

1அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

2அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

3நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.

4அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.

5கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

6அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,

7சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

8ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,

9கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.

10காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

11நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

12தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.

13கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

14செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

15சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் காவல் சேனாபதி எடுத்துக்கொண்டான்.

16சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.

17ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.

18காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.

19நகரத்திலே அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.

20அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.

21அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

22பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

23பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

24அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.

25ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

26அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

27யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

28அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

29அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.

30அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, அனுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.

1இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.

2இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்.

3இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

4இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.

5லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

6ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.

7சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.

8அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.

9அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால்,

10தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.

11அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?

12ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.

13இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே.

14நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.

15அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.

16அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,

17நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

18முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

19நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

20அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.

21ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,

22அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.

23அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.

24இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.

25மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

26பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

27அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.

28நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.

தனிவாசிப்பு

1தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.

2கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.

3கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே.

4ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரமனைகளைப் பட்சிக்கும்.

5நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.

7காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.

8நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

9மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்புவித்தார்களே.

10தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.

12தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.

14ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.

15அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 144

முழு அதிகாரம் ›

1என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

2அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.

3கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

4மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.

5கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.

6மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.

7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.

8மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.

9கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர்.

11மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.

12அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.

13எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.

14எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.

15இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com