‹ முகப்புமுழுத் திட்டம்

நவம்பர் 15 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்நவம்பர் 15அடுத்த நாள் ›
குடும்பம்

I நாளாகமம் 5-6

முழு அதிகாரம் ›
I நாளாகமம் 5

1ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

2யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.

3இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.

4யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய்.

5இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால்.

6இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.

7தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,

8யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள்.

9கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.

10சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.

11காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்கா மட்டும் வாசம்பண்ணினார்கள்.

12அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.

13அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர்.

14இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.

15கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.

16அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள் மட்டும் வாசம்பண்ணினார்கள்.

17இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை ஏற்றப்பட்டார்கள்.

18ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

19அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,

20அவர்களோடே எதிர்க்கத் துணைபெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

21அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரும் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.

22யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.

23மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் மட்டும், செனீர் மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.

24அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.

25அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச ஜனங்களின் தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்.

26ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.

I நாளாகமம் 6

1லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

2கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.

3அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

4எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.

5அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.

6ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.

7மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.

8அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.

9அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.

10யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.

11அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.

12அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.

13சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.

14அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.

15கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுபோகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.

16லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.

17கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.

18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.

19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:

20கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.

21இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி.

22கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு; இவன் குமாரன் ஆசீர்.

23இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.

24இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.

25எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.

26எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத்.

27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.

28சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.

29மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.

30இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.

31கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும்,

32சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.

33கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.

34இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.

35இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.

36இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.

37இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன்; இவன் கோராகின் குமாரன்.

38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.

39இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.

40இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.

41இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.

42இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.

43இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.

44மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.

45இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.

46இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.

47இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.

48அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தார்கள்.

49ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.

50ஆரோனின் குமாரரில் எலெயாசார் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.

51இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி; இவன் குமாரன் செராகியா.

52இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.

53இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.

54அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,

55யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

56அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.

57இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,

58ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,

59ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும்,

60பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.

61கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.

62கெர்சோமின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.

63மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.

64அப்படியே இஸ்ரவேல் புத்திரர் லேவியருக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,

65சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.

66கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.

67எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

68யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,

69ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,

70மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.

71கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,

72இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,

73ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,

74ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,

75உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,

76நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.

77மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,

78எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,

79கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,

80காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,

81எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.

1இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்தவருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.

2பூரணப்படுத்துமானால், ஆராதனைசெய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?

3அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.

4அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.

5ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;

6சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.

7அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

8நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:

9தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.

10இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

11அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.

12இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

13இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.

14ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.

15இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்:

16அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,

17அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.

18இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலிசெலுத்தப்படுவதில்லையே.

19ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

20அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

21தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,

22துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

23அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

24மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

25சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

26சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,

27நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

28மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

29தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

30பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.

31ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.

32முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.

33நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.

34நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.

35ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.

36நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

37வருகிறவர் இன்னுங்கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.

38விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

39நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

தனிவாசிப்பு

1சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக்கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.

2இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.

3அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

4பெத்தேலுக்குப் போய்த் துரோகம்பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,

5புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

6ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

7இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோயிற்று.

8இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

13அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

சங்கீதம் 148-150

முழு அதிகாரம் ›
சங்கீதம் 148

1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.

3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

5அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

6அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

7பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே,

8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

9மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

10காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,

11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

13அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

சங்கீதம் 149

1அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.

2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.

3அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்.

4கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

5பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

6ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,

7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,

8அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.

9இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.

சங்கீதம் 150

1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாயவிரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

2அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

3எக்காளதொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

6சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com