‹ முகப்புமுழுத் திட்டம்

நவம்பர் 21 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்நவம்பர் 21அடுத்த நாள் ›
குடும்பம்

I நாளாகமம் 16

முழு அதிகாரம் ›

1அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

2தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து,

3புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

4இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.

5அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,

6பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.

7அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:

8கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

9அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

10அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

11கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

12அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

13அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்.

14அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

15ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

16அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.

17அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

18உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

19அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

20அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

21அவர்களையொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு:

22நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.

23பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.

24ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

25கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

26சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.

27மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.

28ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

29கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

30பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.

31வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.

32சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.

33அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.

34கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

35எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை இரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.

36இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.

37பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,

38எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.

39கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்கதகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை நித்தமும், அந்திசந்தியில், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,

40அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து,

41இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,

42பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.

43பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

1என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.

2நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.

3பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.

4கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.

5அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!

6நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

7சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.

8நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

9அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

10துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

11ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?

12என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.

13உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

14உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

15இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

16வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

17பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

18நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

தனிவாசிப்பு

1ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம்.

2இதோ, நான் உன்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டை பண்ணப்பட்டிருக்கிறாய்.

3கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.

4நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

5நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?

6ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் தேடிப்பார்க்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் ஆராய்ந்தெடுத்துக்கொள்ளப்பட்டது.

7உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.

8அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9தேமானே, ஏசாவின் பர்வதத்திலுள்ள மனுஷர் யாவரும் கொலையினால் சங்கரிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.

10நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.

11நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.

12உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.

13என் ஜனத்தின் ஆபத்து நாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,

14அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.

15எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.

16நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இராதவர்களைப்போல் இருப்பார்கள்.

17ஆனாலும் சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

18யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜூவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.

19தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

20சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப்பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

21ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.

1பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.

2அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.

3அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

4அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.

5அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.

6அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.

7அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.

8சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.

9அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.

10சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.

11அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

12பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

13அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

14அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.

15அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

16அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

17பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.

18அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.

19ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.

20அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

21அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.

22இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?

23உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

24பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

25உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.

26அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

27இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.

28அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.

29அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.

30வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

31இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

32நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

33பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.

34அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?

35மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.

36அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.

37ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்.

38புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.

39அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com