1அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவு செய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
3அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.
4அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்ற பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.
5அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.
6அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்காசோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரை வீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி,
7முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ணவந்தார்கள்.
8அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
9அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.
10யுத்த இராணுவங்களின் முகப்புத் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி,
11மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன் சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:
12என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணை நிற்பேன்.
13தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
14பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
15சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்.
16தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.
17அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினான்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்.
18சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.
19தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது, அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.
1மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின் தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.
2தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து பொன்நிறையும் ரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையையும் கொண்டுபோனான்.
3பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப்பாரைகளுக்கும், கோடரிகளுக்கும் உட்படுத்தி; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.
4அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.
5திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
6மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,
7இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் குமாரன் யோனத்தான் அவனைக் கொன்றான்.
8காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
1இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,
2பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
4அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
5கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
6இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
7அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
8அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,
9உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
10உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;
11தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
12தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
13ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
14நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,
15உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
16நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
17அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
18உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
19குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
20அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
21உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
22ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;
23அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
24மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
25கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.
1இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
3யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
4யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒரு நாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்.
5அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.
6இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.
7மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,
8மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
9யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.
10அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
1பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
2அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
4சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:
5விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
6சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
9அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
11அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
13கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
14முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
15நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
16ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
17வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
18ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
19அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
20அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.
22பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
23படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
24அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று.
25அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
26பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
27அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.
28அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
29அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
31தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
32அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
33அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டன.
34அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
38பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.
40இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
41அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
42தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
43அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
44அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
45அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
49அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.
50இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
52எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
53அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
56அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com