1அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
2அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
3குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?
4பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,
5சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.
6ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,
7இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.
8அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து,
9பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
10அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்த பிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.
11அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.
12அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.
13அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.
14அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.
15அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.
16அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
17ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே. அவன் செத்துப்போனான்.
18இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும், ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.
19அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
20அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான்.
1ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.
2விவாகம்பண்ணாதிருக்கவும்,
3விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
4தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
5அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
6இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்.
7சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
8சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
9இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
10இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
11இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
12உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
13நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
14மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.
15நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.
16உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
1மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
2இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.
3ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.
4அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.
5தென்றிசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.
6அவர்கள் சில வருஷங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
7ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடதிசை ராஜாவின் அரணிப்புக்குள் பிரவேசித்து, அவர்களை விரோதித்து,
8அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்துக்குக் கொண்டுபோய், சில வருஷங்கள்மட்டும் வடதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பான்.
9தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான்.
10ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான்.
11அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்.
12அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்.
13சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தின சேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.
14அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்.
15வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது.
16ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்காரமான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும்.
17தன் ராஜ்யத்தின் வல்லமையோடெல்லாம் தானும் தன்னோடேகூடச் செம்மைமார்க்கத்தாரும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதியுண்டாகும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே ஸ்திரம்பெறான்; அவள் அவன் பட்சத்தில் நில்லாள்.
18பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந்தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.
19ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்.
20செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான்.
21அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான்.
22பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.
23ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய்நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான்.
24தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும்.
25பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.
26அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய் வரும்; அநேகர் கொலையுண்டு விழுவார்கள்.
27இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.
28அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான்.
29குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது.
30அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான்.
31ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட சேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.
32உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.
33ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.
34இப்படி அவர்கள் விழுகையில் கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைவார்கள்; அப்பொழுது அநேகர் இச்சக வார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள்.
35அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.
36ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.
37அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப்பெரியவனாக்கி,
38அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.
39அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான்.
40முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்து போவான்.
41அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.
42அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை.
43எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.
44ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,
45சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசைபண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.
25என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
26என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
28சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
29பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
30மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
31உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
32நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
33கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
34எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
35உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
36என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
37மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
38உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
39நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
40இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
41கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
43சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
48நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com