1இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று.
3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
4ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
5அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்திலே போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
6அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
7இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப்பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்றான்.
8அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
9இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார்; இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.
10நமக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணிவைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக் கொண்டார்கள்.
11இப்படி இஸ்ரவேலர் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்குக் கேள்வியானபடியினால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?
12நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.
13நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.
14இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
15ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார் ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால் மட்டும் வந்தார்கள்.
16பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.
17அவனோடே பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், அவனோடேகூட அவனுடைய பதினைந்து குமாரரும், அவனுடைய இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய்க் கடந்து போனார்கள்.
18அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
19ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.
20உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்.
21அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
22அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
23ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
24சவுலின் பேரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம் பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம் பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.
25அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டு வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு கூட வராமல் போனது என்ன என்று கேட்டான்.
26அதற்கு அவன்: ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
27அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.
28ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்.
29அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன் காரியத்தைக் குறித்து அதிகமாய் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
30அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
31கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான் மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்து வந்தான்.
32பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.
33ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.
34பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர. நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
35இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்வேண்டியது என்ன?
36அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
37நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
38அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
39ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
40ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி ஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,
41இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதா மனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.
42அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.
43இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.
1மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
3அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
4அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
5இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்.
7அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
8அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
10அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
12அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும்., அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
13எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.
14இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
16அப்படியாகட்டும், நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன் மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?
18தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத்தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?
19நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
20ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;
21மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ வென்றும் பயந்திருக்கிறேன்.
1பதினோராம் வருஷம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, ஜனசதளங்களின் ஒலிமுகவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,
3கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; சமுத்திரம் தன் அலைகளை எழும்பிவரப்பண்ணுகிறவண்ணமாய் நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக எழும்பிவரப்பண்ணுவேன்.
4அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.
5அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; அது ஜாதிகளுக்குக் கொள்ளையாகும்.
6வெளியில் இருக்கிற அதின் குமாரத்திகளோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
7கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
8அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால் கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து,
9உன் மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான்.
10அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும்வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரை வீரரும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன் மதில்கள் அதிரும்.
11தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.
12அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.
13உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
14உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
15தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
16கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையலாடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள்.
17அவர்கள் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்பெற்ற நகரியே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன் குடிகளோடுங்கூடச் சமுத்திரத்திலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ!
18நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது சமுத்திரத்திலுள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.
19கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழானநகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும்,
20பூர்வகாலத்து ஜனத்தண்டைக்குக் குழியில் இறங்குகிறவர்களோடே நான் உன்னை இறங்கப்பண்ணுவேன்; நீ குடியேறாதிருக்கும்படி பூர்வகாலமுதற்கொண்டு பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்ளோடேகூட நான் உன்னைத் தங்கியிருக்கப்பண்ணுவேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.
21உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
1தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
2நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.
3நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்தஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
4உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
5கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.
6இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.
7உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
8அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
9எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
10தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
11உமது வலதுகரத்தை என் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
12பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
13தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
14தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
15ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
17பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
18கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
19உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
20உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
21துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்.
22தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
23உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com