‹ முகப்புமுழுத் திட்டம்

ஏப்ரல் 11 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஏப்ரல் 11அடுத்த நாள் ›
குடும்பம்

லேவியராகமம் 15

முழு அதிகாரம் ›

1பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.

3அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.

4பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.

5அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

6பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பபட்டிருப்பானாக.

7பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

8பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

9பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.

10அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

11பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

12பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

13பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.

14எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.

15ஆசாரியன் அவைகளில் ஒன்றைப்பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.

16ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

17கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

18இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

19சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊரலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

20அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

21அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

22அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

23அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

24ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிறபடுக்கையும் தீட்டுப்படும்.

25ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.

26அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

27அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

28அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.

29எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.

30ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

31இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.

32பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும்,

33சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார்.

1என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

2கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

3துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.

4மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

5பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டதன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.

6எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

7அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.

8அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.

9வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

10கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.

11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; நீர் கொண்டு கறுத்த கார்மேகங்களையும் தம்மைச்சூழக் கூடாரமாக்கினார்.

12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.

13கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.

14தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

15அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.

16உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.

17என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

18என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

19என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால்பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

20கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

21ஏனெனில் கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாய் விலகினதில்லை.

22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.

23அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

24ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.

25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;

26புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

27தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.

28தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

29உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

30தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

31கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

32என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.

33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

34வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

35உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

36என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

37என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.

38அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.

39யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.

40நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

41அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.

42நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.

43ஜனங்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.

44அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக் குறுகுகிறார்கள்.

45அந்நியர் மனமடிந்து, தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.

46கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.

47அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

48அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.

49இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.

50தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

தனிவாசிப்பு

நீதிமொழிகள் 29

முழு அதிகாரம் ›

1அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.

4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.

5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

6துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.

7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.

8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.

9ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

10இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.

11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.

13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்கொடுக்கிறார்.

14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.

15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.

17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.

20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.

21ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.

22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.

23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.

24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.

27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

II தெசலோனிக்கேயர் 3

முழு அதிகாரம் ›

1கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,

2துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.

3கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

4மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.

5கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.

6மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

7இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்றுநடவாமலும்,

8ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

9உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.

10ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

11உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

12இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

13சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

14மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

15ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.

16சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

17பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.

18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com