1ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
2கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
3ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.
4அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப் போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
5இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
6பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
7அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
8அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
10போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
11பின்பு ஆரோன் தனக்காவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக்கொன்று,
12கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
13தான் சாகாதபடிக்கு தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
14பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
15பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின் மேல் சுற்றிலும் பூசி,
19தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்.
20அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
21அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
22அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன்.
23ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,
24பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் ஜனங்களின் சர்வாங்கதகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
25பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
26போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
27பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
28அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
29ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும், உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.
30கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
31உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.
32அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,
33பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக்கூடாரத்துக்கும், பலிபீடத்துக்கும், பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
34இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
2பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
5அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
7கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
8கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
9கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.
10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன.
11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
12தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்
13துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.
14என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
1யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன:
2மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.
3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
4வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
5தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
6அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
7இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
8மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
9நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
10எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
11தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.
12தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.
13வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.
14தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு.
15தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
16அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.
17தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
18எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு.
19அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.
20அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
21மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.
22அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
23பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப் பெண்ணினிமித்தமுமே.
24பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
25அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
26சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,
27ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
28தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
29விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
30அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
31போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே.
32நீ மேட்டிமையானதினால் பைத்திமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
33பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
1நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
2விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
4நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
5கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
6இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.
7தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
8ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.
9எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
10வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
11நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
12என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
13முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.
14நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
15பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
16அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.
17நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
18குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
19இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
20இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com