1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
3உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
4விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
6நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
7மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
8அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
9நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
13பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
14செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
15நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
16உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
17உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
18பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
19என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.
20ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
21அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
22அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23நீங்கள் அந்த தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
24பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
25ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
26யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
27உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
28செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
29தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
30என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
31அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
33யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
34உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
36சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
37ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
1பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை.
2ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
3யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
6இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
7வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்.
8யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.
9வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்.
10யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் இராஜா. (சேலா)
1நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது.
2நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
3வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டும், என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன்.
4நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.
5எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.
6மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.
7வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடுமாடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது.
8வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.
9எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது.
10என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.
11என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
12பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.
13இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன்.
14ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.
15மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
16மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.
17ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
18சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.
19அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.
20ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன்.
21ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.
22மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?
23அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.
24மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.
25என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்?
26தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
1ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.
2விவாகம்பண்ணாதிருக்கவும்,
3விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
4தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
5அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
6இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்.
7சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
8சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
9இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.
10இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
11இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
12உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
13நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
14மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.
15நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.
16உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com