‹ முகப்புமுழுத் திட்டம்

ஏப்ரல் 16 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஏப்ரல் 16அடுத்த நாள் ›
குடும்பம்

லேவியராகமம் 20

முழு அதிகாரம் ›

1கர்த்தர் மோசேயை நோக்கி:

2பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்; இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.

3அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன்.

4அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,

5நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

6அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

7ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

8என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

9தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.

10ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

11தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

12ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

13ஒருவன் பெண்ணோடே சம்யோகம்பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

14ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

15ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

16ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

17ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

18ஒருவன் சூதகஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

19உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

20ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.

21ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.

22ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.

23நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.

24நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

25ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.

26கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.

27அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

1கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

2என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.

3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.

4கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

6கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவை அநாதி காலமுதல் இருக்கின்றனவே.

7என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

8கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

9சிறுமைபட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

10கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.

11கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.

12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

13அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.

14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

15என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாய் இருக்கிறேன்.

17என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என் இடுக்கண்களிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.

18என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

19என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.

20என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

22தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.

தனிவாசிப்பு

1ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

2பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;

3கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;

4அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;

5கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;

6தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு;

7கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;

8சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

9வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?

10மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.

11அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

12மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

13அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

14தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

15முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.

16பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன்,. அங்கே அநீதி இருந்தது.

17சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

18மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.

19மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

20எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

21உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

22இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

I தீமோத்தேயு 5

முழு அதிகாரம் ›

1முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,

2முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.

3உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

4விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.

5உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

6சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.

7அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.

8ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

9அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,

10பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

11இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,

12முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.

13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

14ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.

15ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.

16விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.

17நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

18போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

19மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

20மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

21நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

22ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

23நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

24சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

25அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com