1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.
3அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.
4ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,
5தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,
6சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
7சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.
8தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.
9ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
10அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.
11ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.
12ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.
13விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.
14ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டி பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
15அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,
16அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
17பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
18நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,
19அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
20பழுதுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.
21ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.
22குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
23நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
24விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக.
25அந்நிய புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
26பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
27ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள் முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
28பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
29கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
30அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
31நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
32என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
33நான் உங்களுக்கு தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
1என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
2நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
3அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.
4அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
5அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
6கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
7கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
8கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
9தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
1தேவ புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுமரங்களை முறிக்கிறார்.
6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
7கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.
8கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
9கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் "கர்த்தருக்கு மகிமை" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10கர்த்தர் ஜலப்பிரளயத்தின்மேல் வீற்றிருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
11கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
1நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
2தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
3தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
4நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்.
5நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.
6உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
7அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும், வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
8ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
9பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.
10பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
11பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
12வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும், அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.
13சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
14அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான்; அவன் கையில் யாதொன்றும் இல்லை.
15தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
16அவன் வந்த பிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?
17அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.
18இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
19தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
20அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.
1கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
2பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
4உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
5அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
6இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
7தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
8ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி.
9அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
10நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
11அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
12அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
13நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
14உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
15ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
16ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங்கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
17அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
18அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com