1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
3ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
4சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
5முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
6அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
7முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
8ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
9பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
10நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
11உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
12நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
13கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
14உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
15நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
16ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
17நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
18அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலியையும் செலுத்தி,
19வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.
20அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.
21அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
22உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
23பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.
25அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
26பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
27அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
28அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
29அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
30அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
31அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை.
32அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
33பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
34நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
35முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
37நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
38நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
39நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
40முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
41வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.
42நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
43ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
44அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
1கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
2என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
3கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
4கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
5ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
6நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என்று, நான் வளமுடன் இருக்கையில் சொன்னேன்.
7கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
8நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
10கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
11என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்.
12என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
1சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு; அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
2அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பாக்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.
4அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.
5அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.
6அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?
7மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே? அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
8இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
9ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
11மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?
12நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?
1ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
2அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
3நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி.
4தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
5மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
6பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
7நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
8தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
9இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
10ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
11இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
12அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
13நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
14இவைகளைஅவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
15நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
16சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
17அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
18அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
19ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
20ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
21ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
22அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
23புத்தியீனமும் அயுக்தமுமான (அறிவற்றதுமான) தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
24கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
25எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
26பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com