‹ முகப்புமுழுத் திட்டம்

ஏப்ரல் 21 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஏப்ரல் 21அடுத்த நாள் ›
குடும்பம்

லேவியராகமம் 25

முழு அதிகாரம் ›

1கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:

2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.

3ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.

4ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,

5தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது.

6தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,

7உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக.

8அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.

9அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.

10ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.

11அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.

12அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.

13அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன்தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

14ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.

15யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.

16பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும் வேண்டும்.

17உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

18என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

19பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

20ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,

21நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.

22நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

23தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.

24உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.

25உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.

26அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,

27அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

28அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.

29ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

30ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.

31மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.

32லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.

33இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.

34அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

35உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

36நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.

37அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.

38உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

39உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.

40அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.

41பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.

42அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.

43நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.

44உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.

45உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.

46அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.

47உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,

48அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.

49அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.

50அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.

51இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.

52யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.

53இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப் போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது.

54இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள்.

55இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

1எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.

2எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

3நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

4இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)

5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)

6இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.

7நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)

8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

9வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.

11நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

தனிவாசிப்பு

1ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.

2ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.

3நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே: அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.

4ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத் தக்கவன் யார்?

5கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

6எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.

7இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?

8ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

9இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வெறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

10பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

11துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

12பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

13துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

14பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

15ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.

16நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

17தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

II தீமோத்தேயு 4

முழு அதிகாரம் ›

1நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

2சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.

3ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு.

4சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

5நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

6ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.

7நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

8இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

9நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

10ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

14கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

15நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

16நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

17கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

18கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

19பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

20எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

21மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

22கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com