‹ முகப்புமுழுத் திட்டம்

ஏப்ரல் 20 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஏப்ரல் 20அடுத்த நாள் ›
குடும்பம்

லேவியராகமம் 24

முழு அதிகாரம் ›

1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

2குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.

3ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை.

4அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.

5அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

6அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,

7ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.

8அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.

9அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்தியகட்டளையாக கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.

10அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.

11அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

12கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.

13அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

14தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.

15மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.

16கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.

17ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

18மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.

19ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.

20நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.

21மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.

22உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

23அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

1கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

2உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.

4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.

5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

6வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

7உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.

8சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

9எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.

10என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

11என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.

12செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்.

13அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனை பண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.

14நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.

15என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.

16நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

17கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.

18நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

19உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

20மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

21கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.

22உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

23கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.

24கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

தனிவாசிப்பு

1பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜனனநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது.

2விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.

3நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.

4ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும்.

5ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.

6மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.

7இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.

8ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

10இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.

11சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு.

12ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.

13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?

14வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.

15இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.

16மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?

17மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?

18நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.

19நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப் பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.

20ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

21சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.

22அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.

23இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.

24தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?

25ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன்.

26கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.

27காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:

28என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.

29இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.

II தீமோத்தேயு 3

முழு அதிகாரம் ›

1மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.

2எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,

3சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,

4துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

5தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

6பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,

7எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

8யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.

9ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.

10நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,

11அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

12அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

13பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.

14நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,

15கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

16வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

17அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com