‹ முகப்புமுழுத் திட்டம்

ஏப்ரல் 3 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஏப்ரல் 3அடுத்த நாள் ›
குடும்பம்

லேவியராகமம் 6

முழு அதிகாரம் ›

1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

2ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,

3அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,

4அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,

5பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,

6தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.

7கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

8பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

9நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

10ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,

11பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.

12பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

13பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

14போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.

15அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

16அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

17அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.

18ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.

19பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

20ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.

21அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்படக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.

22அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.

23ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.

24பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

25நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.

26பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.

27அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.

28அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.

29ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது மகா பரிசுத்தமானது.

30எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.

சங்கீதம் 5-6

முழு அதிகாரம் ›
சங்கீதம் 5

1கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.

2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.

5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.

6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

8கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

9அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.

10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே.

11உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

12கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.

சங்கீதம் 6

1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன.

3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.

4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.

5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

7துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று.

8அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

9கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

10என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.

தனிவாசிப்பு

நீதிமொழிகள் 21

முழு அதிகாரம் ›

1ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

2மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.

3பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.

4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.

5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.

6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.

7துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.

8குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.

9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

10துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.

11பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.

12நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.

13ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

14அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.

15நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.

16விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.

17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

18நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.

19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

20வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

21நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.

23தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

24அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.

26அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.

27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.

28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.

29துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.

30கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

கொலோசெயர் 4

முழு அதிகாரம் ›

1எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்.

2இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.

3கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

4திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

5புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

6அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

7பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன்வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.

8உங்கள் செய்திகளை அறியவும், உங்கள் இருதயங்களைத் தேற்றவும்,

9அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

10என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.

11யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள்.

12எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.

13இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.

14பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

15லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.

16இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.

17அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.

18பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com