1குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
2சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
3அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
4இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
5இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.
6ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
7பாவநிவாரணபலி எப்படியோ குற்ற நிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.
8ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
9அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.
10எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
11கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
12அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
13அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும்.
14அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
15சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
16அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.
17பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
18சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
19தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
20ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
21மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
23நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.
24தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
25கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
26உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
27எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
28பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
29நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
30கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.
31அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.
32உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.
33ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
34இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.
35கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
36இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.
37சர்வாங்கதகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.
38கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.
1என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
2சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
3என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,
4என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
5பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைப் புழுதியிலே தாழ்த்தக்கடவன். (சேலா)
6கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
7ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
8கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
9துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
10செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.
11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
13அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
14இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
16அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
17நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
1எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
2பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
3உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
6உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
7ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!
1திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம்.
2ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.
3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
4தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
5மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.
6பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
7ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
10பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.
12கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
13வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
14பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
15பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.
16தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான்.
17உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
18அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும்.
19உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
20சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும்,
21ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?
22ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
23கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.
24கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
25அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
26கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
27செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
28உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.
29தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
1பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
2தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
3நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
4எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
5எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
6நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
7இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
8எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.
9ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
10அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com