‹ முகப்புமுழுத் திட்டம்

ஏப்ரல் 5 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஏப்ரல் 5அடுத்த நாள் ›
குடும்பம்

லேவியராகமம் 8

முழு அதிகாரம் ›

1கர்த்தர் மோசேயை நோக்கி:

2நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேகத்தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து,

3சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.

4கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,

5மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,

6கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,

7அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக்கட்டி,

8அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,

9அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைத் கட்டினான்.

10பின்பு மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,

11அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம்பண்ணி,

12அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.

13பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக்கட்டி, குல்லாக்களைத் தரித்து,

14பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;

15அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.

16பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,

17காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.

18பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

19அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

20ஆட்டுக்கடா சந்துசந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.

21குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.

22பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

23பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.

24பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

25கொழுப்பையும், வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,

26கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,

27அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,

28பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப் பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.

29பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.

30மோசே அபிஷேகதைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.

31பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும், அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,

32மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,

33பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.

34இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.

35நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.

36கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.

1கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

2உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

3என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.

4நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.

5ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர்.

6சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அற்றுப் போயிற்று.

7கர்த்தரோ என்றென்றைக்கும் வீற்றிருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று எற்படுத்தியிருக்கிறார்.

8அவர் பூவுலகை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.

9சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.

10கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

11சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.

12எனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூக்குரலை மறவார்.

13மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,

14தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்குவரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.

15ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.

16கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.)

17துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

18எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

19எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.

20ஜாதிகள் தங்களை மனுஷர்தான் என்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா)

தனிவாசிப்பு

நீதிமொழிகள் 23

முழு அதிகாரம் ›

1நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

2நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

3அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

4ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

5இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும்.

6வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

7அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.

8நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.

9மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்.

10பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.

13பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

15என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.

17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

18நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

19என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.

20மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.

21குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.

26என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.

27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

28அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.

29ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?

30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

31மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

33உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

34நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.

35என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

I தெசலோனிக்கேயர் 2

முழு அதிகாரம் ›

1சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.

2உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.

3எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.

4சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.

5உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.

6நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.

7உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,

8நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.

9சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.

10விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.

11மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,

12தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.

13ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர்வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.

14எப்படியெனில், சகோதரரே, யூதேயாதேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.

15அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,

16புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.

17சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.

18ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.

19எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;

20நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com