1பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
2அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
4பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
5மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.
6மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.
7நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக்கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
8கர்த்தர் ஆரோனை நோக்கி:
9நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
10பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் பண்ணும்படிக்கும்,
11கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
12மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
13அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக்கட்டளை பெற்றிருக்கிறேன்.
14அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
15கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
16பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:
17பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்கு கொடுத்தாரே.
18அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப்பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
19அப்பொழுது ஆரோன் மோசையை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
20மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.
1நான் கர்த்தரிடத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி, "பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ" என்று சொல்லுகிறீர்கள்.
2இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே, நீதிமான் என்னசெய்வான்?
4கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
5கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
6துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
7கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
1இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் இல்லை.
2அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
3இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக.
4அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன.
7கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
8மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
4வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.
5ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.
7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
8வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
9நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
10மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
11ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
12கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
13கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.
14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.
15நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
16தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
17உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.
18பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.
19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்.
20மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
21உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
22அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
23வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
24சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
25தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
26துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
27தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
28தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
1அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்னபிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
2கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.
3நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
4தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
5உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப்பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
6இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
7தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
8ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
9சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
10அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;
11புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
12நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
13அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
14இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
15கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
16ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
18ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com