1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:
3மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
5குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
6முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
7பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
8இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
9ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
10ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
12தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
13பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
14பருந்தும், சகலவித வல்லூறும்,
15சகலவித காகங்களும்,
16தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,
17ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
18நாரையும், கூழக்கடாவும், குருகும்,
19கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
20பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
21ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
22வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.
23பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
24அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
25அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
26விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
27நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
28அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
29தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
30உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
31சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
32அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
33அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
34புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.
35அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
36ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும், சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
37மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
38அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
39உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
40அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
41தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
42தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும் அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
43ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
44நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.
45நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
46சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம் பண்ணும்பொருட்டு,
47மிருகத்துக்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.
3எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படக்கடவது.
4பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.
5பெண்பிள்ளயைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.
6அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒருவயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
7அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச்சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
8ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
1கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் அருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
6சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
1உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
2அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.
3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
4மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.
5மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான்.
9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
10பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
17வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
19அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
20விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
24பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
25அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
26பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
28கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.
1சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
2இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
3சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
4சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.
5நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
6ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
7தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
8பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
9தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
10நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
11ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
12அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
13அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
14மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.
16எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
19ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
20தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
22பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.
23சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
25சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
26சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
27இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com