1பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
2நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
3நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
4அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
5இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
6அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
7போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்.
8பாதி ராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு. திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
9நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.
10அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
11இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
12நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.
13இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில் நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்.
14அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
15அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப்பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
16அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
17மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
18அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் என்றாள்.
1போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
2அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
3அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
4ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனத்தில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
5அப்பொழுது போவாஸ்: நீரே நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.
6அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
7மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.
8அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.
9அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
10இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
11அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
12இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
13போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
14அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
15அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
16நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
17அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
19எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
20அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
21சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
22ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
1நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.
2அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
3பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
4விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது அவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
5அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
6அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.
7தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான்.
8புபிலியுவினுடைய தகப்பன் ஜூரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக்க கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
9இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து. குணமாக்கப்பட்டார்கள்.
10அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
11மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
13அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
14அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்கள் ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
15அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
17மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
18அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
19யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்ட வேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
20இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன. இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
21அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
22எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
23அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள் அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.
24அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.
25இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:
26நீங்கல் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்.
27இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.
28ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
29இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
30பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,
31மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
1இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
2இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
3எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் குமாரனாகிய கெதலியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.
4அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்தமனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் க்ஷேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
5அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான்.
6அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
7அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
8அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:
9ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.
10அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
11அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,
12எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்க வைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான்.
13அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்.
14பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.
15அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.
16அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.
17அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
18நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
19அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான்.
20அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.
21நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
22இதோ, யூதா ராஜாவின் வீட்டிலே மீதியான எல்லா ஸ்திரீகளும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய இஷ்டர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் உளையிலே அமிழ்ந்தினபின்பு அவர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்றும் அந்த ஸ்திரீகளே சொல்லுவார்கள்.
23உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டு போவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
24அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை.
25நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடே பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைப் கேட்பார்களேயாகில்,
26நான் யோனத்தானுடைய வீட்டிலே சாகாதபடிக்கு ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்துக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணினேன் என்று சொல்வாயாக என்றான்.
27பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.
28அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாக காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
1நான் கர்த்தரிடத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி, "பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ" என்று சொல்லுகிறீர்கள்.
2இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே, நீதிமான் என்னசெய்வான்?
4கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
5கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
6துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
7கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
1இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் இல்லை.
2அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
3இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக.
4அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தசொற்களாயிருக்கின்றன.
7கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
8மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com