‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 11 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 11அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 1

முழு அதிகாரம் ›

1எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.

2அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.

3அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஒப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.

4அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான்.

5அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.

6கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

7அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

8அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.

9சீலோவிலே அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.

10அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

11சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.

12அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

13அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

14அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

15அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

16உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள்.

17அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

18அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

19அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைத்தருளினார்.

20சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.

21எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

22அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால் மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.

23அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.

24அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.

25அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.

26அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.

27இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

28ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

2ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;

3நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

4இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,

5மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

6அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,

7தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

8உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

9நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.

10நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,

11உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,

12எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்கு தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

13சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்ததுபோல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.

14கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.

15ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.

16கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

17விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

18சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

19தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

20எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

21அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

22அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

23அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள்.

24இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

25தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

26இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.

27அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.

28தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

29அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,

30புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,

31உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

32இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

தனிவாசிப்பு

1யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.

2சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது.

3அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல் சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.

4அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.

5ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப்பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான்.

6பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,

7சிதேக்கியாவின் கண்களைக்கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டான்.

8கல்தேயர் ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.

9நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.

10காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

11ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

12நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்.

13அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,

14எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.

15இதுவுமல்லாமல், எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:

16நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

17ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.

18உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

சங்கீதம் 13-14

முழு அதிகாரம் ›
சங்கீதம் 13

1கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

2என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் அருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.

5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

சங்கீதம் 14

1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

4அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.

6சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.

7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com