‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 15 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 15அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 5-6

முழு அதிகாரம் ›
I சாமுவேல் 5

1பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.

2பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.

3அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.

4அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.

5ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.

6அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.

7இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி;

8பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள்.

9அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.

10அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

11அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.

12செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.

I சாமுவேல் 6

1கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.

2பின்பு பெலிஸ்தர் பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.

3அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.

4அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

5ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.

6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?

7இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,

8பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.

9அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

10அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,

11கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.

12அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.

13பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.

14அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.

15லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.

16பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.

17பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.

18பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள் மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.

19ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

20இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,

21கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.

1இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

2அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

3அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

4உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

5மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

6அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.

7நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

8நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

9இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

10நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

11அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

12இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

13நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

14அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

15ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

16மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

17அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

18ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

19அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

20மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

21ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

தனிவாசிப்பு

1எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,

2ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.

3கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.

4அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.

5யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரத்திகளையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,

6கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

7கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச்சேர்ந்தார்கள்.

8தக்பானேசிலே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

9நீ உன் கையிலே பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா ஜனங்களுக்கு முன்பாக அவைகளைத் தக்பானேசில் இருக்கிற பார்வோனுடைய அரமனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணிலே புதைத்துவைத்து,

10அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேசார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல் அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான்.

11அவன் வந்து, எகிப்து தேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.

12எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப்போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப்போல் எகிப்து தேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

13அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

2பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.

3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.

4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.

5அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.

6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.

7கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

8கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.

9கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.

10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன.

11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.

12தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்

13துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.

14என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com