‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 16 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 16அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 7-8

முழு அதிகாரம் ›
I சாமுவேல் 7

1அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

2பெட்டி கீரியாத்யாரீமிலே அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

3அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.

4அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.

5பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.

6அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

7இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,

8சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

9அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார்.

10சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.

11அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள்.

12அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

13இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.

14பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையில் இராதபடிக்கு, விடுவித்துக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

15சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

16அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தபின்பு,

17அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

I சாமுவேல் 8

1சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

2அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பேர் யோவேல், இளையவனுக்குப் பேர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.

3ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

4அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:

5இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

6எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

7அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.

8நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.

9இப்பொழுதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

10அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:

11உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.

12ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.

13உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.

14உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.

15உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.

16உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.

17உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.

18நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.

19ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

20சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.

21சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.

22கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

1ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.

2பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?

3கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

4மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

5ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

6நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

7மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.

8ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

9மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.

10அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.

11அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

12ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.

13நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

14நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

15இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.

16மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

17முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.

18பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.

19உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

20பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.

21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.

22இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

23பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

தனிவாசிப்பு

1எகிப்து தேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:

2இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின்மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

3இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேவர்களுக்கு தூபங்காட்டவும், ஆராதனைசெய்யவும் போய், எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை.

4நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.

5ஆனாலும் அவர்கள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக்கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச்சாய்க்காமலும் போனார்கள்.

6ஆகையால், என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்தரமும் பாழுமாய்ப்போயிற்று.

7இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு, உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து,

8உங்களை வேரற்றுப்போகப்பண்ணுவதற்காகவும், நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காவும், நீங்கள் தங்கியிருக்கவந்த எகிப்துதேசத்திலே அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டுவானேன்?

9யூதாதேசத்திலும் எருசலேமின்வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும், உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்து போனீர்களோ?

10அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.

11ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாகவும், என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி,

12எகிப்துதேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள்.

13நான் எருசலேமை தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன்.

14எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும்வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.

15அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக:

16நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தைகளின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,

17எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

18நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து போனோம்.

19மேலும் நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அநுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள்.

20அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி:

21யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும், உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார்.

22உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக்கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.

23நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும், இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்.

24பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

25இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்குத் தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.

26ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

27இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள்.

28ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதா தேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.

29நான் இவ்விடத்தில் உங்களை தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன என் வார்த்தைகள் மெய்ப்படுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

30இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத்தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

சங்கீதம் 20-21

முழு அதிகாரம் ›
சங்கீதம் 20

1ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

2அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

3நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)

4அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

5நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

6கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

7சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

9கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.

சங்கீதம் 21

1கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!

2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)

3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.

4அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.

5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.

6அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

7ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.

8உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

9உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.

10அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.

11அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.

12அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.

13கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com