1பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.
2அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுவதும் பேசாதிருந்தார்கள்.
3சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பெயர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.
4அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.
5அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.
6அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னைச் சிறுமைப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
7அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
8அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.
9பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை.
10அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
11அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
12அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
13பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழுஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான்.
14அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும் கூடப் பிடுங்கிக்கொண்டு போனான்.
15அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,
16இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,
17தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
18அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.
19அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
20அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
21பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
22அவன் தலைமயிர் சிரைக்கப்பட்டபின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று.
23பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.
24ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.
25இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
26சிம்சோன் தனக்குக் கைலாகு கொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.
27அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
28அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,
29சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,
30என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
31பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.
1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான்.
2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.
3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.
4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.
5இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
6புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.
7வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
8அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.
9அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
10உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
11பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
13பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம் பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.
14அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
15அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து,
16பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம்.
17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
18அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
19வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.
20பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,
21தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
22இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.
23கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
24ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
25இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.
26தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
27எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
28ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
29நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
30உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
31ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
32இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
33ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது.
35இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான்.
37அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,
38பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.
1எகொனியா என்னும் ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போனபிற்பாடு,
2எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன சகல ஜனங்களுக்கும் எழுதி,
3யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்:
4இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால்,
5நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
6நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,
7நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.
8மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம் போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
9அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
12அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
13உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
14நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.
16ஆனால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,
17இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப்பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
18அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
21என் நாமத்தைச் சொல்லி, உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
22பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக்குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
23அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து, தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதினான்.
24பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:
25நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்றஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
26இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய எந்த மனுஷனையும் நீர் காவல் அறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே.
27இப்போதும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனதோத் ஊரானாகிய எரேமியாவை நீர் கடிந்துகொள்ளாமற்போனதென்ன?
28இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்களென்று பாபிலோனில் இருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.
29இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.
30ஆதலால், கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:
31சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமயாவைக்குறித்து, கர்த்தர்: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, உங்களைப் பொய்யை நம்பப்பண்ணுகிறபடியினால்,
32இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
1பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக்கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
2பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
4அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
5இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
6காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.
7கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
8ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.
9பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து.
10அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.
11பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
12பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
13அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
14அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
15அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
16அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,
17சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:
18யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
19அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
20அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.
22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
23வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
24அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.
25அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.
27அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
28அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.
29அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே.
30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
31அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை.
32நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
33ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
34ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
36ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான்.
37இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
40சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
41அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.
42ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது.
43கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
45நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.
46அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.
47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com