1எப்பீராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
2அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக் குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
3அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
4அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
5மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
6அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
7யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்;
8அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
9எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
10அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.
11அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.
12மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.
13அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
1நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,
2அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம்.
3சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.
4அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
5அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
6ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
7நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தைவிட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.
8மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியா பட்டணத்துக்குவந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.
9தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
10நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
11அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
12இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
13அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
14அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
15அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
16செசரியா பட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டுவந்தார்கள்.
17நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
18மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
19அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
20அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
21புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
22இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.
23ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால், பிரார்த்தனைபண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.
24அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.
25விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.
26அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.
27அந்த ஏழுநாட்களும் நிறைவேறிவருகையில் ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு:
28இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்தஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
29எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்.
30அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.
31அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாதிபதிக்குச் செய்திவந்தது.
32உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாதிபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.
33அப்பொழுது சேனாதிபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
35அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
36இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
37அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?
38நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங்கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.
39அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
40உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப்பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்:
1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
3இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத்திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்னவார்த்தைகளே.
5கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
6ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
7ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
8அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.
9தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
10ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
11உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
12கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது.
13உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களுமில்லை.
14உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும்வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிறவண்ணமாகவும் நான் உன்னை தண்டித்தேன்.
15உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.
16ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
17அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.
19அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.
20அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.
21அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்துவரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
22நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
23இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.
24கர்த்தர் நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்.
1அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம்பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
4இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
5மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள்.
6எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.
7கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.
8இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள்.
9அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
10ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.
11கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
12அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
13அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
14ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.
17உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.
19நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.
20எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
22சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள்.
23இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.
24அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத்திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்.
25நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
26இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.
27இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன்.
28அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.
30அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
31இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன்.
32நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்தநாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
34இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
35சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நிமயங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
36இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
37கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
38இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்.
39அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும்.
40பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.
1ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு.
2வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
3கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
4அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.
5அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
6அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
8நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.
9வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
10அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.
11அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.
12அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
13அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
14அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
15பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
16விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
17விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
20அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com