‹ முகப்புமுழுத் திட்டம்

ஆகஸ்ட் 22 — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம்

‹ முந்தைய நாள்ஆகஸ்ட் 22அடுத்த நாள் ›
குடும்பம்

I சாமுவேல் 14

முழு அதிகாரம் ›

1ஒரு நாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

2சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.

3சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.

4யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.

5அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.

6யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக்கொண்டாகிலும், இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.

7அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

8அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.

9நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.

10எங்களிடத்துக்கு ஏறி வாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.

11அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்குமுன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,

12தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா, கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

13யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான்.

14யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.

15அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாகி, தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.

16பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.

17அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம் பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.

18அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.

19இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.

20சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.

21இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்துவந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.

22எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.

23இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை இரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன் மட்டும் நடந்தது.

24இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்தருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.

25தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.

26ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.

27யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.

28அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.

29அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

30இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

31அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.

32அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

33அப்பொழுது, இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

34நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.

35பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

36அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

37அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.

38அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

39அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.

40அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.

41அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.

42எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.

43அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.

44அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.

45ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.

46சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.

47இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.

48அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.

49சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள் அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.

50சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி; அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் குமாரன்.

51கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.

52சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.

1அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

2நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

3அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

4ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,

5அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.

6நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.

7ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,

8புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

9உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.

10சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

11அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

12நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

13பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.

14உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

15சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.

16ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

17ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.

18கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

19பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

20அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

21நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

தனிவாசிப்பு

1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,

2தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள்.

3வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.

4குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.

5அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும் யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.

6நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்பிவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.

7பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.

8பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

9பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாய மண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

10கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.

11அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.

12பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.

13திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.

14மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப்போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம்பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.

15அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.

16அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.

17மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

18அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.

19யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

20நீ எனக்கு தண்டாயுதம் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.

21உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.

22உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.

23உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.

24பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

25இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக்கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

27தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரக்கூப்பிடுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.

28மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.

29அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.

30பாபிலோன் பராக்கிரம்சாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.

31கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்தமனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,

32அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.

33பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப் போரடிக்குங் காலம்வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

34பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.

35எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.

36ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.

37அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.

38ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.

39அவர்கள் களிக்கும் சமயத்திலே நான்அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

40அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப்பண்ணுவேன்.

41சேசாக்கு பிடியுண்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் பிரமிப்பானது எப்படி?

42சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.

43அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.

44நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.

45என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.

46உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.

47ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.

48வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

49பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் கொலையுண்கிறவர்கள் விழுவார்கள்.

50பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.

51நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.

52ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.

53பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

54பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.

55கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்.

56பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.

57அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

58பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

59பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்.

60யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.

61எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:

62கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித் தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி,

63நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக் கட்டி, அதை ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு,

64இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.

1கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

2என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

3கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

4கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.

5ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

6நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என்று, நான் வளமுடன் இருக்கையில் சொன்னேன்.

7கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;

8நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

9கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

10கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

11என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்.

12என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

‹ முந்தைய நாள்திட்டம்அடுத்த நாள் ›

சத்திய வேதம் — ஒரு வருட மெக்கெய்ன் தமிழ் வேத வாசிப்புத் திட்டம் · thetamilbible.com